கடலூர்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
|தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
ஒதுக்கீடு ஆணை
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, 117 பயனாளிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் கருணைத்தொகையை வழங்கி, தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும் வழங்கி பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சாவி ஒப்படைக்கப்படும்
குடிசையில் வாழும் மக்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1970-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார். அதன்படி கடந்த 1972-ம் ஆண்டில் கடலூர் செம்மண்டலத்தில் 117 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டிடம் சேதமடைந்து உள்ளதால், அதை இடித்து விட்டு ரூ.27 கோடியே 9 லட்சம் செலவில் 272 வீடுகள் புதிதாக கட்டி, அதில் குடியிருந்தவர்களுக்கே வீடுகள் வழங்கப்பட உள்ளது. தற்போது வீடுகளை காலி செய்து கொடுத்தால் 15 மாதத்தில் வீடு கட்டி உங்களிடம் சாவி ஒப்படைக்கப்படும்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடிசை மாற்று வாரியம் என்ற திட்டத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாற்றி உள்ளார். இத்திட்டத்தில், பயனாளிகள் தங்களது வீடுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.8 ஆயிரம் கருணைத்தொகை ரூ.24 ஆயிரமாக வழங்கப்படுகிறது.
30 ஆயிரம் வீடுகள்
தமிழகம் முழுவதும் இந்த வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் சேதமடைந்த 30 ஆயிரம் வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்ட இருக்கிறோம். இதற்காக இந்த 2 நிதி ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அதில் 15 ஆயிரம் வீடுகள் கட்ட இருக்கிறோம். இதற்காக சேதமடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முன்பு பயனாளிகள் அதிக பங்களிப்பு தொகை செலுத்த வேண்டியிருந்தது. ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை செலுத்தி வந்தனர்.
தி.மு.க. ஆட்சியில் இந்த பங்களிப்பு தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது சாலை அமைத்தல், மழைநீர் வடிகால், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசே செய்கிறது. இதனால் ரூ.60 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும்.
பணியிடை நீக்கம்
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். அதன்படி தவறு செய்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஐ.ஐ.டி., க்யூப் போன்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களை ஆய்வுக்கு பயன்படுத்தி வருகிறோம். 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அவர்களிடம் அறிக்கை பெற்று வருகிறோம். 50 ஆண்டுக்கு இந்த வீடுகள் உறுதியாக இருக்கும்,
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
நிவாரணம்
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டு உள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டால் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மண்டல தலைவர்கள் சங்கீதா செந்தில், பிரசன்னா, இளையராஜா, கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, செந்தில்குமாரி, புஷ்பலதா உள்பட கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.