நாளை மறுதினம் காதலியை கரம் பிடிக்க இருந்த நிலையில் விஷம் குடித்து மணமகன் தற்கொலை
|அருள்மணியும், ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 31). எலக்ட்ரிசீயனான இவரும், வேதாரண்யம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இருவீட்டாரும் திருமண அழைப்பிதழை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திருமண செலவிற்கு பணம் இல்லாததால் மணமகன் அருள்மணி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அருள்மணி மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனை காணாததால் இருவரின் உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது புஷ்பவனம் கடற்கரையில் அருள்மணி மயங்கி கிடந்தார்.
உடனடியாக உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அருள்மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருள்மணி மயங்கி கிடந்த இடத்தில் விஷப்பாட்டில் கிடந்ததால் அவர் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருள் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை மறுநாள் தனது காதலியை கரம் பிடிக்க இருந்த நிலையில் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் மணமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.