ஈரோடு
சென்னிமலை அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
|சென்னிமலை அருகே திருமணம் ஆன 3-வது நாளில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே திருமணம் ஆன 3-வது நாளில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமாப்பிள்ளை
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் குமார் (வயது 32). இவர் பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் ஊரில் உள்ள ஒரு கோவிலில் பூஜையும் செய்து வந்தார். கடந்த 19-ந் தேதி குமாருக்கும், மதுரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சென்னிமலையில் திருமணம் நடந்தது.
விஷம் குடித்துவிட்டதாக...
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் குமாரும், அவருடைய மனைவியும் பெருந்துறை செல்வதாக கூறிவிட்டு கொம்மக்கோவிலில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஆனால் மதியம் குமார் மட்டும் வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் மனைவியை எங்கே என குமாரிடம் கேட்டு உள்ளனர். அதற்கு, 'மனைவி, மதுரைக்கு சென்றுவிட்டதாகவும், தான் விஷம் குடித்து விட்டதாகவும்,' கூறிவிட்டு குமார் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் இறந்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி ஏதாவது கோபித்துக்கொண்டு ஊருக்கு சென்றதால் குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளையான குமார் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.