கோயம்புத்தூர்
ரூ.201 கோடியில் புதிய மேம்பாலங்கள்
|கோவையில், 2 இடங்களில் ரூ.201 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கோவை
கோவையில், 2 இடங்களில் ரூ.201 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு விழா
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ. தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மைல்கல் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்ட சாலை அமைக்கும் பணிக்கான நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இன்று (நேற்று) பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்ட பணிகளுக்கு 95 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் 2 மேம்பாலங்கள்
இதற்கிடையில் சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் மேம்பாலம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ரூ.141 கோடியில் சிங்காநல்லூரில் 2.40 கி.மீ. தூரத்திற்கும், ரூ.60 கோடியில் சாய்பாபா காலனியில் 1.20 கி.மீ. தூரத்திற்கும் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். அ.தி.மு.க. விட்டு சென்ற மேம்பால பணிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
மெட்ரோ ரெயில்
மேட்டுப்பாளையம்-சத்தி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவைக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை கொடுக்கிறோம். எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை. கோவை-அவினாசி ரோடு மேம்பால பணிகளை அடுத்த ஆண்டு(2024) ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயிலுக்கான செயல்திட்ட பணிகளும் வேகமாக நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் புனரமைக்கப்பட்டு வரும் குதிரை வண்டி கோர்ட்டு, மேம்பாலம் கட்டப்பட உள்ள சாய்பாபா காலனி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கிராந்தி குமார், தலைமை பொறியாளர் சந்திரசேகர், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த குமார், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சோமசுந்தரம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.