சென்னை
சென்னை உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் மாறி செல்லும் பயணிகளுக்கு புதிய வசதி
|சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வரும் 'டிரான்சிட்' பயணிகள் பிற நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்க வருகை பகுதியில் இருந்து நேரடியாக புறப்பாடு பகுதிக்கு செல்ல புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்து விட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வது 'டிரான்சிட் பயணம்' என அழைக்கப்படுகிறது. இவ்வாறு வரும் பயணிகள் வேறு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் வருகை பகுதி வழியாக வெளியில் வந்து பின்னர் புறப்பாடு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. மிக முக்கிய வி.வி.ஐ.பி பயணிகள் தவிர மற்ற சாதாரண பயணிகளுக்கு இந்த நடைமுறையால் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய டிரான்சிட் பயணிகளுக்கு நேரடியாக செல்லக்கூடிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் வருகை பகுதியில் இருந்து நேரடியாக புறப்பாடு பகுதியின் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்ல கூடிய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் டிரான்சிட் பயணிகள் எந்தவித சிரமம் இல்லாமல் அங்கிருந்து வேறு நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்க வருகை பகுதியில் இருந்தே புறப்பாடு பகுதியில் உள்ள பாதுகாப்பு பகுதிக்கு செல்ல நுழைவு பகுதி அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில் உள்நாட்டு விமானத்திற்கு வந்து விட்டு மற்றொரு உள்நாட்டு புறப்பாடு விமானத்தில் செல்ல முடியும். இந்த வசதி உள்நாட்டு விமான டிரான்சிட் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.