< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மாநில செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தினத்தந்தி
|
11 Sept 2022 5:47 AM IST

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.

மின் கட்டண உயர்வு

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, புதிய கருவிகள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியத்தின் கடன் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரத்து 647 கோடியாக உயர்ந்தது. இதனையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை மாற்றி அமைக்கும்படி தமிழக மின்சார வாரியத்தை கேட்டுக்கொண்டது.

தமிழ்நாடு மின்சார வாரியமும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ந் தேதி மின்சார வாரியம் மனுக்களை சமர்ப்பித்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதனையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்றவர்கள் மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கை மக்களை பாதிக்கும் என்று அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. அத்துடன், கடந்த 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

இந்தநிலையில் மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முறையான அனுமதியை வழங்கியது. அதன் அடிப்படையில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதே நேரத்தில், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பது தொடரும். 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வு

குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய நுகர்வோர்களுக்கு மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

வரும் 2026-2027-ம் ஆண்டு வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். அத்துடன் ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதியன்று பணவீக்கத்துக்கு ஏற்ப 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்டண உயர்வு விவரம்

புதிய மின் கட்டணத்தின்படி 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் தற்போது ரூ.1,130-ல் இருந்து ரூ.1,725-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 500 முதல் 600 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் ரூ,1,786-ல் இருந்து ரூ.1,958 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) ரூ.55, 300 யூனிட் வரை மின்சார நுகர்வு செய்யும் 36.25 லட்சம் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) ரூ.145-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) ரூ.295-ம், 500 யூனிட் பயன்படுத்தும் 10.56 லட்சம் வீட்டு நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) ரூ.595-ம், 600 யூனிட் வரை மின்சார நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின்சார நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.310-ம் கட்டண உயர்வு இருக்கும்.

700 யூனிட் பயன்படுத்தும் 1.96 லட்சம் வீட்டு நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்), ரூ.550-ம், 800 யூனிட் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) ரூ.790-ம், 900 யூனிட் வரை பயன்படுத்தும் 84 ஆயிரம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.1,130-ம் உயர்வு இருக்கும்.

பொதுப்பயன்பாட்டுக்கு யூனிட் ரூ.8

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 நிலை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், தனி குடியிருப்புகளில் ஒரு வீட்டை தவிர மற்ற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ அல்லது குத்தகைக்கு (லீஸ்) விடப்பட்டிருந்தாலோ அதற்கான ஒப்பந்த ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இல்லையென்றால், பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.

ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால், அவர்கள் தங்களது தனித்தனி ரேஷன் கார்டுகளை காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வீட்டு மின்சார இணைப்புக்கும் பொதுப்பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல் வணிக மின்நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

புதிய மின் இணைப்பு

புதிதாக மின் இணைப்பு வழங்கும்போது செலுத்தப்படும் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஒரு முனை இணைப்பு கேட்பவர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும், மின்மீட்டர் கட்டணம் ரூ.600-லிருந்து ரூ.750, மின்நுகர்வு கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.300 ஆகவும், மேம்படுத்தப்பட்ட கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், மின் இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கான பழைய கட்டணம் ரூ.2 ஆயிரத்து 800 கட்டணத்திற்கு பதிலாக புதிய கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 50 கட்ட வேண்டும்.

இதேபோல் மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9 ஆயிரத்து 950-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கோருபவர்களுக்கு ஒரு முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 400-லிருந்து ரூ.9 ஆயிரத்து 250 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.15 ஆயிரத்து 950-லிருந்து ரூ.27 ஆயிரத்து 300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ரூ.59 ஆயிரம் கோடி வருவாய்

நடப்பு 2022-23-ம் ஆண்டுக்கான மொத்த வருவாய் தேவையான ரூ.71 ஆயிரத்து 940 கோடிக்கு எதிராக, ரூ.12 ஆயிரத்து 504 கோடி பற்றாக்குறையுடன் உள்ளது. இந்நிலையில், புதிய மின்சார கட்டண உயர்வு மூலம் ரூ.59 ஆயிரத்து 435 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், 2023-2024-ம் ஆண்டு மின்வாரியத்துக்கு இழப்பு ரூ.748 கோடியாக குறையும் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்