< Back
மாநில செய்திகள்
தாய்மொழியில் படிப்பதால் வாழ்க்கை செம்மையாகும்: புதிய கல்விக்கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம்-மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

தாய்மொழியில் படிப்பதால் வாழ்க்கை செம்மையாகும்: புதிய கல்விக்கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம்-மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

தினத்தந்தி
|
23 Jan 2023 12:15 AM IST

தாய்மாெழியில் படிப்பதால் வாழ்க்கை செம்மையாகும். புதிய கல்விக்கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

காரைக்குடி,

தாய்மாெழியில் படிப்பதால் வாழ்க்கை செம்மையாகும். புதிய கல்விக்கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

கட்டிட கலைக்கு சான்று

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான் பட்டமளிப்பு விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாடு தொன்று தொட்டு அறிவுசார் பூமியாக திகழ்ந்து வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களின் அறிவியல் பூர்வமான கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. மெய்யறிவில் தமிழர்கள் எவ்வளவு ஆழமாக திகழ்ந்தனர் என்பதற்கு திருக்குறளே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் தான் தமிழகம் ஒரு சிறந்த அறிவு கருவூலமாக பார்க்கப்படுகிறது.

தாய்மொழி என்பது தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். தாய்மொழியில் பாடங்களை படித்தால் முழுமையான புரிதல் ஏற்படும் அதற்காகத்தான், மத்திய அரசு தாய்மொழி வாயிலான கல்வியை வலியுறுத்துகிறது. கல்வி என்பது வேலையை பெறுவதற்கான கருவி மட்டுமல்ல, வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கும், மனித மாண்புகளை காப்பதற்கும் கல்வி பயன்பட வேண்டும்.

தொழில்நுட்பத்தில் சிறந்த குறியீடு

அழகப்பா பல்கலைக்கழகம் உயர்கல்வி தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்று சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் 21-ம் நூற்றாண்டுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய உத்திகளையும் வெளிக்கொணரும் நிறுவனமாக திகழ வேண்டும்.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. முதன்மையாக 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலக டிஜிட்டல் தரவரிசையில் ஒரு சிறந்த குறியீட்டைப் பெற்றுள்ளது.

இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம்

புதிய கல்விக்கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான மற்றும் பல்வேறு கலாசாரம் பண்பாடுகளை உள்ளடக்கிய கல்வியை முன்னிலைப்படுத்துகிறது. அனைத்து துறைகளிலும் குறிப்பாக முன்னேறி வரும் இந்தியாவில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்