< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் பொது கழிவறைகளில் உள்ள குறைபாடு பற்றி புகார் தெரிவிக்க புதிய செயலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் பொது கழிவறைகளில் உள்ள குறைபாடு பற்றி புகார் தெரிவிக்க புதிய செயலி

தினத்தந்தி
|
21 Nov 2022 1:38 PM IST

மாமல்லபுரத்தில் பொது கழிவறைகளில் உள்ள குறைபாடு பற்றி புகார் தெரிவிக்க புதிய செயலியில் பதிவேற்றம் செய்யலாம் என்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் பல்லவர்கள் உருவாக்கிய பாரம்பரிய நினைவு சின்னங்கள் உள்ளதால் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நகரமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன நினைவு சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் முக்கிய இடங்களில் நவீன கழிவறைகள் அமைத்துள்ளன. பொது கழிவறைகள், சமுதாய சுகாதார வளாகங்கள் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. உலக கழிவறை தினத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறி கொள்ளும் வகையிலும் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கழிவறைக்கும், தனித்தனி கியூ. ஆர். ஸ்கேனிங் குறியீடு இடம்பெற்ற சுவரொட்டியை ஓட்டி புதிய செயலியை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி.ராகவன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் முன்னிலையில், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் தொடங்கி வைத்தனர்.

மாமல்லபுரத்தில் கழிவறை பயன்படுத்துவோர் தங்களது கைபேசி செயலியில் கியூ.ஆர். குறியீடு ஸ்கேன் செய்து இங்கு தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, தண்ணீர், மின் விளக்கு, கைகளை கழுவும் சோப், நாப்கின் பொருத்தும் சாதனம் உள்ளிட்டவை உள்ளதா? அல்லது எத்தகைய வசதி இங்கு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம் என்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்