மதுரை
பிரத்தியேக செயலியை உருவாக்கி புகார்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி
|பிரத்தியேக செயலியை உருவாக்கி புகார்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறினார்.
பிரத்தியேக செயலியை உருவாக்கி புகார்கள் மீது தாமதமின்றி நடவடி க்கை எடுக்கப் படும் என புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு
தமிழகம் முழுவதும் ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், துணை கமிஷனர்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர். அதில் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த நரேந்திரன்நாயர் தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு பொறுபேற்று கொண்டார். அவருக்கு பதில் மதுரை போலீஸ் கமிஷனராக லோகநாதன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூரை சொந்த ஊராக கொண்ட இவர், விவசாயத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். 2002-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த இவர் நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று போலீஸ் சூப்பிரண்டாக தர்மபுரி, சென்னை சி.பி.சி.ஐ.டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக தாஞ்சாவூரில் பணியாற்றினர். தொடர்ந்து ஐ.ஜி.யாக திருச்சியிலும், சென்னை ஆயுதப்படை மற்றும் சென்னை தலைமையிடத்தில் பணிபுரிந்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, சட்டம், ஒழுங்கு பராமரிக்க முக்கியத்துவம் அளிப்பேன். என்னென்ன வழிமுறையில் குற்றச்செயல்களை தடுக்க முடியுமோ அதை செய்வேன். போக்குவரத்து விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி தண்டனை பெற்றுத் தரப்படும். போலீஸ் துறைக்கான தொழில் நுட்ப வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டம், ஒழுங்கு, குற்றத்தடுப்புக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரும். போலீஸ் நிலையங்களில் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி குறிப்பிட்ட நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தனியாக புதிய செயலி உருவாக்கப்படும். சமூக பொறுப்புடன் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.