காலாவதியான அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
|காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் வழியில் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்றின் கதவு திடீரென கழன்று விழுந்ததில் அதில் பயணித்த பெண் பயணி காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கையுடன் சாலையில் தூக்கிவீசப்பட்ட நடத்துனர், சென்னையில் மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே ஏற்பட்ட ஓட்டையில் கீழே விழுந்து பெண் பயணி படுகாயம் என முறையான பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளும், அதனால் ஏற்படும் தொடர் விபத்துக்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும் அறிவிப்பை செயல்படுத்த முன்வராத திமுக அரசு, காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை தொடர்ந்து இயக்கி அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கிலான பொதுமக்கள் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை மற்றும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.