கரூர்
27 பள்ளிகளுக்கு ரூ.10.19 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்
|பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 27 பள்ளிகளுக்கு ரூ.10 கோடியே 19 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்
கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம் நெரூர், வாங்கல், குப்புச்சிப்பாளையம் மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளுக்கு தேவையான புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கிடும் வகையில் பணிகளை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
கூடுதல் வகுப்பறைகள்
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெங்கநாதன் பேட்டை, என்.புகளூர், பெரிய வரப்பாளையம் மற்றும் வாங்கல் ஆகிய இடங்களிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பம்பட்டி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் தொட்டம்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னம்மன் நாயக்கன்பட்டி, சிந்தலவாடி, மகாதானபுரம், கட்டாரிப்பட்டி, போத்து ராவுத்தன்பட்டி, மலைப்பட்டி, செக்கானம், ஆகிய இடங்களில் தலா ரூ.31 லட்சத்து 70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், மாயனூர், சிவாயம், காட்டூர் ஆகிய இடங்களில் தலா ரூ.61 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களும் கட்டப்படுகிறது.
மேலும் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் மேலபட்டி, தண்ணீர் பள்ளி ஆகிய இடங்களில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், அய்யர் மலையில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தத்தில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னியம்பாளையம், பாதிரிப்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.
27 பள்ளிகளில்...
அரவக்குறிச்சி பேரூராட்சி அரவக்குறிச்சியில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் என மொத்தம் 27 பள்ளிகளில் ரூ.10 கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.