திண்டுக்கல்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.4 கோடியில் புதிய கட்டிடம்
|திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.4 கோடியில் கட்டப்படும் புதிய கட்டிடம் புதிய இடத்தில் கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரூ.4 கோடியில் புதிய கட்டிடம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே மேற்கு தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் கோட்ட கலால் அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், நிலஅளவை அலுவலகம், முத்திரை தாள் கட்டண அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆகியவையும் செயல்படுகின்றன. இந்த கட்டிங்கள் அனைத்தும் மிகவும் பழமையானது ஆகும்.
இதனால் மேற்கு தாலுகாவுக்கு ரூ.4 கோடியே 12 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு தாலுகா அலுவலகத்தை காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மேற்கு தாலுகா அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மேற்கு தாலுகா அலுவலகத்தின் அருகே மாவட்ட சிறை, காந்தி மார்க்கெட், சீனிவாசபெருமாள் கோவில், லாரி சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. இதனால் தாலுகா அலுவலக சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுவதால், தினமும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வர பஸ் வசதி இல்லை.
ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூர், பன்றிமலை 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் ஆடலூர், பன்றிமலை ஆகிய கிராமங்கள் சுமார் 40 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன. இதுபோன்று தூரத்தில் இருக்கும் கிராமங்களில் இருந்து வருபவர்கள், திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வருகின்றனர்.
நடந்து செல்லும் மக்கள்
பஸ்நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் மேற்கு தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் சிலர் நடந்து வருகின்றனர். மேலும் சிலர் அங்கிருந்து ஆட்டோவில் தாலுகா அலுவலகம் வரும் நிலை உள்ளது.
எனவே நெரிசல், பஸ் வசதி இல்லாத இடத்தில் இயங்கும் மேற்கு தாலுகா அலுவலகத்தை, திண்டுக்கல் பஸ் நிலையத்தின் அருகே உள்ள பழைய கோர்ட்டு வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.