< Back
மாநில செய்திகள்
ரூ.9 கோடியில் புதிய கட்டிடம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ரூ.9 கோடியில் புதிய கட்டிடம்

தினத்தந்தி
|
27 May 2022 8:16 PM IST

வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

அரசு ஆஸ்பத்திரி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியானது கடந்த 1915-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ஆனைமலை ஹில்ஸ் ஆஸ்பத்திரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை வழங்கி வந்தது, இந்த அரசு ஆஸ்பத்திரி மட்டுமே. அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் ஆஸ்பத்திரி வசதிகள் இருந்தாலும், தீவிர சிகிச்சைக்காக இருப்பது வால்பாறை அரசு ஆஸ்பத்திரிதான். இந்த அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், அனைத்து பிரிவுக்கும் பணியாளர்கள் என பணியாற்றி வந்தனர். ஆனால் காலப்போக்கில் டாக்டர்கள் பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை நிலவியது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய வசதிகள் இல்லாத நிலையில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. தற்போது போதிய டாக்டர்கள் பணியில் இருந்தும், பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்கிறது.

ரூ.9 கோடியில் கட்டிடம்

இந்த நிலையில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை வைத்ததின்பேரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நவீன வசதிகளையும், புதிய கட்டிடங்களையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக தேசிய சுகாதார இயக்க நிதி ரூ.9 கோடியில் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக தனி வளாகமும், நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிண அறையும், ஆஸ்பத்திரிக்கு சமையலறையும் கட்டப்படுகிறது. இதற்காக இன்று நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு, அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர்(பொறுப்பு) மகேஷ் ஆனந்தி தலைமை தாங்கினார். அனைத்து பிரிவு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நலவாழ்வு சங்க உறுப்பினர் கோவைபொண்ணான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலி பணியிடங்கள்

இதையடுத்து பொதுப்பணித்துறை அரசு கட்டிட பிரிவு பொறியாளர்கள் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கினார்கள். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வால்பாறை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை இப்போது தொடங்கியுள்ள புதிய கட்டிட பணியோடு போதிய கட்டிட வசதிகள் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வரும் செவிலியர், தொழில்நுட்ப பணியாளர், அலுவலக பணியாளர், சுகாதார பணியாளர், சமையலர், இரவு காவலர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்