ராமநாதபுரம்
உபகரணங்களை ஒன்று சேர்க்கும் பணி தொடக்கம்
|பாம்பன் கடலில் அமைய உள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை ஒன்று சேர்க்கும் பணி தொடங்கியது. 3 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் அமைய உள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை ஒன்று சேர்க்கும் பணி தொடங்கியது. 3 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 109 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்தில் மிகப்பெரிய ஒரு சாதனை படைத்துள்ளது. இப்பாலம் மிகவும் பழமையானதாகி விட்டதால் அதன் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இப்பணி ரெயில்வே துறையின் ஆர்.வி.என்.எல். நிர்வாகம் மூலம் நடக்கிறது. இதற்காக கடலுக்குள் 339 தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. மேலும் மண்டபத்தில் இருந்து புதிதாக அமைய உள்ள தூக்குப்பாலம் வரையிலான கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டன.
ஒன்று சேர்க்கும் பணி
இந்த நிலையில் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் முக்கிய மற்றும் இறுதி கட்ட பணிகளான தூக்குப்பாலத்தை பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்காக தூக்குப்பாலத்திற்கான பலவிதமான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தனித்தனியாக செய்யப்பட்டு பாம்பன் பகுதிக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு அதை பொருத்தும் பணி நடந்து வருகிறது. தனித்தனியாக உள்ள அந்த பாகங்களை ஒன்று சேர்த்து பொருத்திய பின்னர் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலத்தை பொருத்தும் பணியானது விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலில் ரூ.430 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் மொத்தம் 339 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த தூண்கள் மீது 55 கர்டர்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். புதிய தூக்குப்பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மீதம் உள்ள இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெறும்.
இலக்கு நிர்ணயம்
பாலத்தின் மையப்பகுதியில் கட்டப்படவுள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் செய்து பாம்பன் ரெயில்வே பால தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த உபகரணங்களை முழுமையாக ஒன்று சேர்த்து இணைக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கிரேன் மூலம் மையப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தூண்கள் மீது பொருத்தும் பணிகள் விரைவில் நடைபெறும். இதுவரையிலும் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தூக்குப்பாலத்தை ஆபரேட் செய்வதற்கு வசதியாக கடலுக்குள் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. அதில் அனைத்து விதமான தொலைதொடர்பு வசதிகளும் செய்யப்படவுள்ளது என்றார்.