< Back
மாநில செய்திகள்
வங்கி வாடிக்கையாளருக்கு புதிய ஏ.டி.எம். கார்டை அனுப்பி நூதன மோசடி
சேலம்
மாநில செய்திகள்

வங்கி வாடிக்கையாளருக்கு புதிய ஏ.டி.எம். கார்டை அனுப்பி நூதன மோசடி

தினத்தந்தி
|
21 March 2023 8:25 PM GMT

எடப்பாடி:-

எடப்பாடி பகுதியை சேர்ந்த பொதுத்துறை நிறுவன அலுவலருக்கு தபாலில் ஏ.டி.எம். கார்டை அனுப்பி வைத்த மோசடி கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சைபர் கிரைம் குற்றங்கள்

சமீப காலமாக பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு யுக்திகளை கையாண்ட போதும், மோசடி கும்பல் அதையும் தாண்டி பல்வேறு புதிய நூதனமான வகையில் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெருமளவிலான தொகையை நாள்தோறும் அபகரித்து வருவது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்தவரும், தர்மபுரி மாவட்டம் அரூரில் பணிபுரிபவருமான பொதுத்துறை அலுவலர் ஒருவருக்கு தபால் மூலமாக ஒரு புதிய ஏ.டி.எம். கார்டு வந்தது.

வங்கி ேமலாளர் போன்று...

அதை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் புதிய ஏ.டி.எம். கார்டு இருந்தது. இதையடுத்து ஒரு சில மணி நேரத்தில் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் எனவும், உங்களுக்கு தபாலில் புதிய ஏ.டி.எம். கார்டு அனுப்பப்பட்டது பெற்றுக்கொண்டீர்களா? என விசாரித்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே தன்னிடம் ஏ.டி.எம். கார்டு இருப்பதாகவும், அதற்கு மேலும் ஓர் ஆண்டுகள் வரை காலாவதியாகும் காலம் இருப்பதாகவும் பதில் அளித்தார்.

அதற்கு மறுமுனையில் பேசிய மர்ம நபர், தற்போது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில் வங்கியில் அதிக பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய ஏ.டி.எம். கார்டு தபால் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் வைத்துள்ள செயல்பாட்டில் இருக்கும் ஏ.டி.எம். கார்டானது வருகிற 31-ந் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என்று கூறி உள்ளார். அந்த நபர் கூறிய கருத்துகள் ஒருநிமிடம் பொதுத்துறை அலுவலரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் அந்த மர்ம நபர், பொதுத்துறை அலுவலரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், ஐ.எப்.சி. கோடு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மிகச்சரியாக கூறி உள்ளார். தற்போது உங்களது செல்போனிற்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும், அதை நீங்கள் சரியாக கூறும் நிலையில், உடனடியாக உங்கள் புதிய ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டிற்கு வரும் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

இருப்பினும் மறுமுனையில் பேசிய நபர் மீது சந்தேகம் அடைந்த பொதுத்துறை அலுவலர் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று விசாரித்த போது, புதிதாக வந்த ஏ.டி.எம். கார்டை காண்பித்து விளக்கம் கேட்டார். அப்போது அந்த கார்டு மற்றும் கடிதம் போலியானவை என்பது தெரியவந்தது. இதுபோன்று மோசடி பேர்வழிகளிடம் ஓ.டி.பி. எண்ணை கூறும் பட்சத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து சேமிப்பு தொகை முழுவதையும் மர்ம நபர்கள் அபகரிக்க கூடும் என்ற அதிர்ச்சி தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும், வங்கிகள் எந்த நிலையிலும் தொலைபேசி வழியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த எந்த விவரங்களையும் கேட்பதில்லை எனவும், இது குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்படுமாறும் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது போன்ற சைபர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில், கொங்கணாபுரம் பகுதி போலீசார் சார்பில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன் மற்றும் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்