நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் கைது
|நேபாள சிறுமிக்கு மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ராயல் டவுன் பகுதியை சேர்ந்தவர் மே வால்ட் (வயது 57). இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மதபோதகராக இருந்து வருகிறார். அதே பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்து விட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த மாணவிக்கு மதபோதகர் மே வால்ட் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மதபோதகர் மே வால்ட் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து மத போதகரை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.