மதுரை
நியோமேக்ஸ் நிறுவன முதலீடு மோசடி விவகாரம்: நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு
|நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி குழு தலைமையில் குழு அமைக்கக்கோரிய வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
நியோமேக்ஸ் நிறுவனம்
நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், எங்களது நிறுவனத்துக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதற்கிடையே, வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எங்கள் மீதும், நிறுவனத்தின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினையை சரி செய்ய விரும்புவதால், இதற்கு தீர்வு காண ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிறுவனம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நிலத்தை பங்கீடு செய்து தருவதாக மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 32,048 பேர் முதலீடு செய்துள்ளனர் என உத்தேசமாகத்தான் நிறுவனம் குறிப்பிடுகிறது.
20-ந் தேதி தீர்ப்பு
எவ்வளவு முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். அத்துடன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு? என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி தலைமையிலான குழு அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையை பாதிக்கும். ஏற்கனவே, இது போன்ற நிதி மோசடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்களின் விசாரணை நிலுவையில் உள்ளது. சில குழுக்களில் விசாரணை நீதிபதிகள் விசாரணையில் இருந்து விலகி விட்டனர்.
இந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள முதலீட்டாளர்களை கணக்கிட்டால் பிரித்து வழங்க 49 கோடியே 72 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. ஆனால், டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனை 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டும் உள்ளது. சராசரியாக பிரித்து கொடுக்க வேண்டும் எனில் ஒரு முதலீட்டாளருக்கு 697 சதுர அடி மட்டுமே கொடுக்க முடியும். இது சாத்தியமில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆகியோர் வாதிட்டனர்.
ஒத்தி வைப்பு
அதேபோல, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வழக்கை திசை திருப்புவதற்காக இந்த மனுவை நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. எனவே, இதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தீர்ப்புக்காக வழக்கு 20-ந் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.