திருவள்ளூர்
தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு முழு கொள்ளளவை எட்டி வரும் நேமம் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி உபரிநீர் திறப்பு
|தொடர் கனமழை காரணமாக வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஏரி முழுகொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி உபரிநீர் திறக்கப்பாட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஏரியில் தொடர் மழையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 535 கன அடி ஆகும். தற்போது 480 கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 150 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்த ஏரியின் மதகு எண் 2 மற்றும் 7-ல் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் வழியாக சென்று செம்பரப்பாக்கம் ஏரியை சென்றடையும். தற்போது நேமம் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளதால், நேமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த உபரி நீர் திறப்பை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிக்குமார், பூந்தமல்லி தாசில்தார் செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.