< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

நெல்லை வந்தேபாரத் ரெயிலுக்கு திருச்செந்தூருக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: சித்ராங்கதன் கோரிக்கை

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

நெல்லை வந்தேபாரத் ரெயிலுக்கு திருச்செந்தூருக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஸ்நவ்வுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தென் தமிழகத்தின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நெல்லை-சென்னை இடையே வருகிற 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதற்கு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வந்தே பாரத் ரெயில் சேவையால் தென்தமிழக ரெயில் பயணிகளிடையே வரவேற்பு உள்ளது.

நெல்லை அருகே உள்ள திருச்செந்தூரில் உலகபுகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நவதிருப்பதி, நவ கைலாயம் ஸ்தலங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் வந்தே பாரத் ரெயில் மூலம் சென்னை செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு காலை 5.30 மணிக்கு சென்றடையும் வகையில் இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து இரவு 11 மணிக்கு ரெயில் புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்லும் வகையில் இணைப்பு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்