நெல்லை: ரூ.122-க்கு பதிலாக ரூ.91 ஆயிரம் மின்கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த பெண்..!
|வள்ளியூர் அருகே ரூ.122-க்கு பதில் ரூ.91 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த குறுந்தகவலால் பெண் அதிர்ச்சியில் உறைந்து ேபானார்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து (வயது 40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்றும், இதற்கு வருகிற 5-ந் தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது, வழக்கமாக எனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்டணம் வரும். வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் மின்வாரியம் சார்பில் முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார். இந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.