< Back
மாநில செய்திகள்
நெல்லை மதபோதகரை தாக்கிய வழக்கு: திருச்சபை செயலாளர் உள்பட 11 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
மாநில செய்திகள்

நெல்லை மதபோதகரை தாக்கிய வழக்கு: திருச்சபை செயலாளர் உள்பட 11 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தினத்தந்தி
|
22 July 2023 2:27 AM IST

நெல்லை மதபோதகரை தாக்கிய வழக்கு: திருச்சபை செயலாளர் உள்பட 11 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் மே மாதம் பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், புனித யோவான் பள்ளியின் தாளாளர் பொறுப்பில் இருந்த தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தை நீக்கியதால், அவரது ஆதரவாளர்கள் சிலர் திருச்சபையின் வளாகத்தில் உள்ள அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். அதை திறக்க வந்த மதபோதகர் காட்ப்ரே நோபிலை தி.மு.க., எம்.பி. ஞானதிரவியத்தின் ஆட்கள் அடித்து விரட்டினர்.

இதுகுறித்து மதபோதகர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.பி., ஞான திரவியம், ஜெயசிங், மனோகர் உள்பட 13 பேர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கேட்டு திருச்சபையின் செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், அனீஷ், மைக்கேல், அருள்ராஜ், ஜோசப், ஜீவக்குமார், நோப்ளின், எபினேசர், செல்வக்குமார், நெல்சன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் மனுதாரர்கள் அனைவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்