நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அடாவடி செய்தவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!
|நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோதலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சிறந்து விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 9-வது திருநாளில் நடைபெற்றது. காலை 9.26 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடங்களை பிடித்து விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு இழுத்தனர்.
இந்நிலையில் சுவாமி தேர் வடக்கு ரதவீதியை கடந்து கீழரதவீதிக்கு திரும்புவதற்காக வந்து கொண்டிருந்த போது ஈசான விநாயகர் முக்கில் 2 பிரிவினர் தங்களது சமுதாயத்தை வெளிப்படுத்தும் வகையில் அடையாள ரிப்பன் கட்டிக்கொண்டு ஆடி உள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்த போது, எதிர்த்து பேசி உள்ளனர்.
இதையடுத்து 2 சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தவிர காதை பிளக்கும் அதிக ஒலி எழுப்பும் உபகரணங்கள் சில வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவற்றை இளைஞர்கள் வாங்கி ஒலித்துக் கொண்டே இருந்தனர். கூட்டமாக செயல்பட்ட அந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினார்கள்.
தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தொலைநோக்கி மூலமாகவும், ரதவீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காமித்தனர். தேரில் இருந்தபடியும் போலீசார் தொலைநோக்கி மூலம் கண்காணித்தனர்.