நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ்
|விபத்து குறித்து விளக்கமளிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நெல்லை,
நெல்லையில் கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
மேலும் சூறைக்காற்றில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய கேலரி அரங்கம், விளையாட்டு வீரர்கள் அறைகள் போன்றவை புதுப்பித்து கட்டப்பட்டு திறக்கப்பட்டது. கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் இருந்து பொறியியல் வல்லுனர் குழு அதிகாரி பாண்டுரங்கன் தலைமையிலான அதிகாரிகள் இன்று நெல்லை வ.உ.சி. மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் வ.உ.சி. மைதானத்தில் இடிந்து விழுந்த கேலரியின் மேற்கூரை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஐ.ஐ.டி.யில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து உரிய விளக்கமளிக்குமாறு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில், மைதானத்தின் மேற்கூரை இடிந்தது குறித்து எப்படி என்பது தொடர்பாக ஒப்பந்ததரார் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.