நெல்லை: சாலைகளில் திரியும் மாடுகளை ஏலம் விட்ட மாநகராட்சி - உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
|நெல்லையில் சாலைகளில் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டது.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்போவதாக கூறியிருந்தனர். இதையடுத்து நேற்று சாலையில் சுற்றித்திரிந்த 15 பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் ரூ.1.40 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று சமாதானபுரம் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதையடுத்து இந்த ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டின் உரிமையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாட்டு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தைக்கு ஒத்து வரவில்லை. இந்த நிலையில் திடீரென மாட்டு உரிமையாளர் ஒருவர் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு போலீசார் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஏலம் எடுக்க வந்தவர்களிடம் மாட்டு உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றனர்.