< Back
மாநில செய்திகள்
நெல்லை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது - தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நெல்லை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது - தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Dec 2023 1:43 AM IST

மழைநீரை அகற்றிய பின்னர் ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு-தாழையூத்து இடையே தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ஜல்லி கற்களை மழை வெள்ளம் அடித்துச் சென்றது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 3 குளங்கள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஜல்லி மற்றும் மண் அரித்துச் செல்லப்பட்டது.

இதனிடையே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னர் மின்மோட்டார்கள் மூலம் ரெயில் நிலையத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், மழை நீரை அகற்றும் பணி நேற்று மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்ததாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து நெல்லை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாகவும், மழைநீரை அகற்றிய பின்னர் ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வெ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்