நெல்லை: தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு
|தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் தற்காலிகமாக மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.
நெல்லை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் தற்காலிகமாக மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு சரணாலயம் பகுதிகளில் உள்ள களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தலையணை சூழல் சுற்றுலாதளம் மற்றும் திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட நம்பிகோவில் சூழல் சுற்றுலாதளம், நம்பிகோவில் வழிபாட்டுதளங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்மழையினால், மாவட்ட நிர்வாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு, துணை இயக்குநர் / வன உயிரினக்காப்பாளர் (களக்காடு) உத்தரவின்படி தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.