நெல்லை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் இல்லத்தில் என்.ஐ.ஏ. சோதனை; எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டம்
|நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தம் 9 மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. இதன்படி, நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது.
கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சோதனையை தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு வெளியே வந்த முபாரக், 10 நிமிடத்தில் சோதனை முடிவடைய உள்ளது.
அதனால், அனைவரும் அமைதி காக்கும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டார். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதி அடைந்தனர். எனினும், அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.