நெல்லை: திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திப்பெற்ற திருமலை நம்பி கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு சனி மற்றும் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையிலான மலைப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
சாலை பராமரிப்பு பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் சாலை பராமரிப்பு பணிகள் முழுமை அடைந்தன. ஆனால் பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் நேற்று விலக்கினர். இதையடுத்து நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
3 மாதங்களுக்கு பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.