நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: வழக்கில் நீடிக்கும் மர்மம்
|நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். காண்டிராக்டர் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பவில்லை. இதுகுறித்து உவரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டு, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்தது. அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்து சென்றுள்ளார். அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை. அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார்; மாயமானதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை. இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.