< Back
மாநில செய்திகள்
நெல்லை காங்.நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
மாநில செய்திகள்

நெல்லை காங்.நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்

தினத்தந்தி
|
12 May 2024 9:55 AM IST

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்மமாக இறந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி வருகிறார்கள். இதற்காக தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் சாவதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகின.

இந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் ஒவ்வொரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.ஜெயக்குமார் தனசிங் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இதனால் கூடுதல் தடயங்களை சேகரிப்பதற்காக மதுரை, கோவையில் இருந்து தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் தோட்டத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கிணற்றில் இருந்து பழைய கத்தியும் கண்டெடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி திசையன்விளையில் உள்ள ஒரு கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. எனவே, தற்போது கைப்பற்றப்பட்டு இருக்கும் டார்ச் லைட், ஜெயக்குமார் அன்றைய தினம் வாங்கியதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்