நெல்லை: விபத்தில் காயமடைந்தவரை மீட்டு வந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
|நாங்குநேரியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு வந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த சோபியா(வயது30) மற்றும் இவரது கணவரும் ஏர்வாடி வள்ளியூர் ரோட்டில் இன்று மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்தில் சிக்கி சோபியா காயமுற்றார். இது பற்றி தகவல் அறிந்த நாங்குநேரி சுங்க சாவடியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் காயமடைந்த வரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
நாங்குநேரி ஊருக்குள் நுழைந்த போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் நாங்குநேரியைப் சேர்ந்த மணிகண்டன்(வயது39) இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர் .உடனடியாக ஏற்கனவே காயமுற்ற சோபியாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிரைவர் மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.