< Back
மாநில செய்திகள்
நெல்லை: மணிமுத்தாறு அணை அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு
மாநில செய்திகள்

நெல்லை: மணிமுத்தாறு அணை அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு

தினத்தந்தி
|
17 Jun 2024 12:35 AM IST

கரடியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். இதற்கிடையே பிற்பகலில் மணிமுத்தாறு அணை அருகே உள்ள பிரதான சாலையில் கரடி ஒன்று உலா சென்றது. இதனை பார்த்ததும் அந்த வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

பின்னர் அந்த கரடி அங்குள்ள 9-ம் அணி காவல்துறை பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்தது. இதுபற்றி பட்டாலியன் போலீசார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மரத்தில் அமர்ந்திருந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்