12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்துவதில் அலட்சியம்; விசாரணைக்குப் பிறகு மன்னிப்புக் கடிதம் அளித்த ஆசிரியர்கள்
|விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர்.
சென்னை,
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் குறைந்ததால், விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி விடைத்தாள் நகல்களை வாங்கி பார்த்தபோது, அதில் பல்வேறு மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அலட்சியமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 80 பேரை விசாரணைக்கு அழைக்க தேர்வுத்துறை முடிவு செய்தது. இதன்படி 50 ஆசிரியர்கள் இன்று தேர்வுத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வக்குமார் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில், விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர். எனினும் தவறிழைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.