நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி: 25-ந்தேதி தொடங்குகிறது
|கல்வி மாவட்ட அளவில் நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளுக்கு தொடர் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
சென்னை,
நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களும் ஜொலிக்க வேண்டும் என்ற நோக்கில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுத்தேர்வு தொடங்கியதால், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிந்த பிறகு, வருகிற 25-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, மற்ற நாட்களில் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளுக்கு தொடர் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
கல்வி மாவட்ட அளவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 பயிற்சி மையங்கள் அமைத்து, ஒவ்வொரு பயிற்சி மையத்துக்கும் 40 பேர் வீதம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மையங்களை அமைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்துக்கான கட்டணமும் வழங்கப்படும் எனவும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.