நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள்- மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
|நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்குள் நடத்தப்பட இருக்கும் நீட், ஜே.இ.இ., என்.ஐ.எப்.டி., ஐ.சி.ஏ.ஆர். கியூட், நாடா, என்.டி.ஏ. உள்பட 15 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு அதன் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எந்தெந்த தேர்வுகளுக்கு விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும்? எப்போது நிறைவு பெறும்? அதற்கான விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? கல்வித் தகுதி என்ன? எந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்? என்பது போன்ற விவரங்களையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அனுப்பியுள்ளது.
அதனை கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், விருப்பம் உள்ள 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளை விண்ணப்பிக்க ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.