< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:25 AM IST

சமூகநீதிக்கு எதிரானது: ‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'நீட்' தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், 'நீட்' தேர்வினால் பயன்பெறுபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 50 மாணவ - மாணவியரில், 38 மாணவ - மாணவியர் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், இதில் 37 மாணவ - மாணவியர் 'நீட்' தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்ததாகவும், ஒரு மாணவரை தவிர மற்ற அனைவரும் முதல் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் மத்திய அரசு பாடத் திட்டத்தின்கீழ் பயின்றுள்ளனர் என்பதும், 'நீட்' தேர்வில் வெற்றிபெற எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, பெரும்பாலானோர் 'என்செட்' பாடத் திட்டத்தை படித்தாலே நினைத்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் 'நீட்' தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, 'நீட்' தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தி.மு.க. அரசு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்