< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன்

தினத்தந்தி
|
12 Jun 2024 1:21 PM IST

மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நீட் தேர்வு காரணமாக இளங்கலை மருத்துவக் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறார்கள். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போடுவதில் மாறுபாடுகள், குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் ஒரே அளவு எண்ணிக்கையில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் தேர்வானது, இதே போல் 67 மாணவர்கள் ஒரே அளவு மதிப்பெண் பெற்றது, ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து சமூக ஊடகங்களில் வெளியானது, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் தோல்வியுறுவதும், +2 தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதுமான துயர நிலை போன்ற ஏராளமான குளறுபடிகளும், முரண்பாடுகளும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியதுடன், நீட் தேர்வு நடத்துவதில் ஏற்படும் குளறுபடிகளால் மருத்துவக் கல்வியின் புனிதத் தன்மை பாதித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், இந்த குறைபாடுகளை மவுன சாட்சியாக கடந்து போக முடியாது என்று உரத்த குரலில் எச்சரித்துள்ளது.

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த மருத்துவக் கல்வி சேர்க்கையில் சேர்ந்து பயின்ற மாணவர்கள் தான் இன்று தலைசிறந்த மருத்துவ நிபுணர்களாகவும், சர்வதேச நாடுகளின் நம்பிக்கை பெற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்களாக விளங்கி வருகின்றனர். இந்த நீட் தேர்வு, ஒரு புறம் புற்றீசல்கள் போல் பல்லாயிரக் கணக்கில் உருவாகியுள்ள பயிற்சி மையங்களின் கொள்ளை லாபத் தொழிலுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. மறுபுறம் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிற்சி பெற்று, வசதியற்ற மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் சமூக அநீதியானது இதன் விளைவாக தமிழ்நாட்டில் அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவர்களும் பெற்றோர்களில் சிலரும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீது மாணவர்களும், அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர். தொடர்ந்து நீடித்து வரும் அமைதியின்மையால் மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்