< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு: விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள்
மாநில செய்திகள்

'நீட்' தேர்வு: விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள்

தினத்தந்தி
|
7 March 2023 10:11 PM GMT

‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.

விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.1,700-ம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.1,600-ம், எஸ்.சி., எஸ்.டி., திருநங்கைகள் பிரிவினருக்கு ரூ.1,000-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை விட ரூ.100 அதிகம் ஆகும். இதனுடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.

நீட் தேர்வை பொறுத்தவரையில், வருகிற மே மாதம் 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவுகளில் இருந்து 200 வினாக்களுக்கு இந்த தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in/ என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்