< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு

தினத்தந்தி
|
29 Aug 2022 5:17 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த ரஷித் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய கோரிக்கை என்னவென்றால், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஆகவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு இன்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்து கொண்டிருக்கும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு தேர்வறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்வு மையத்தில் அறை கண்காணிப்பாளர் தேர்வரின் புகைப்படமும் அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். கண்விழித்திரை பதிவு, விண்ணப்பிக்கும் போது கைரேகைப் பதிவு, தேர்வு மையத்தில் கைரேகைப் பதிவு மற்றும் கவுன்சிலிங்கின் போது கைரேகைப் பதிவு என மூன்று இடங்களில் கைரேகைப் பதிவு செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

பேஸ் டிடெக்டர் (Face Detector) போன்ற நவீன கருவிகளை மென்பொருளை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம். தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சோதனை முறைகளை எளிதாக்கி கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நவீன முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பதில் மனுவில் கூறியுள்ளனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்ட நீதிபதி நிர்மல் குமார், ரஷித்தின் ஜாமீன் வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்