< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம்: வழக்கு விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம்: வழக்கு விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
6 Sept 2022 5:48 PM IST

நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம் தொடர்பான மாணவி தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்டு 31-ந் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியனிடம் மனுதாரர் வக்கீல் ஏ.சரவணன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறினார்.

அதன்படி, இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விடைத்தாள் மாறியுள்ளது, மனுதாரரின் விடைத்தாள் கிடையாது, உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அதையடுத்து தேசிய தேர்வு முகமை சார்ந்த வழக்கறிஞர் ஆஜராகி நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாணவியின் அசல் விடைத்தாளை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்