திருச்சி
நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
|நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடந்தது.
சமயபுரம்:
சித்திரை தேர்த்திருவிழா
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் கேடயத்தில் காலை 11.25 மணிக்கு கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் கோவில் குருக்கள் ஏற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் அனைத்து கிராம பட்டையதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம்
இன்று (புதன்கிழமை) முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் முறையே சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், கிளி வாகனம் ஆகியவற்றிலும் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. 30-ந் தேதி 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் யானை வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அடுத்தடுத்த நாட்களில் கைலாச வாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். மதியம் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பஞ்சப்பிரகார புறப்பாடு
4-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 5-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 6-ந்தேதி இரவு பஞ்சப்பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 7-ந்தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.