< Back
மாநில செய்திகள்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தினத்தந்தி
|
19 Jun 2024 4:32 PM IST

ஐகோர்ட்டு மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு செய்து தரக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரையில் அவர்களை வெளியேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

தலைமுறை, தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் செவிசாய்க்காத தமிழக அரசின் மனிதாபிமானமற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளான இலவச வீட்டுமனைப்பட்டா, குழந்தைகளுக்கு தேவையான கல்வி வசதி, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி போன்றவற்றை நிறைவேற்றித் தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஆகவே, சென்னை ஐகோர்ட்டின் மதுரைக்கிளை அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதோடு, அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்