தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகேசிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை
|விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
விளாத்திகுளத்தில் சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
போக்சோ வழக்கு
விளாத்திகுளம் சூரங்குடி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் செல்வம் (வயது 48). தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விளாத்திகுளும் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். விளாத்திகுளம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அரசு வக்கீல் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.