கடலூர்
வேப்பூர் அருகே முதியவர் அடித்து கொலை வாலிபருக்கு வலைவீச்சு
|வேப்பூர் அருகே முதியவரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). இவர் நேற்று மதியம் வேப்பூர் கடைவீதியில் இருந்து, சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறுநெசலூர் கிராமத்தில் சாலையில், வேர்க்கடலை காய வைத்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த கருப்பையா மனைவி ராஜாமணி (55) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக சைக்கிள் மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் சிவகணேசன் (32) ஆறுமுகம் வீட்டுக்கு சென்று, ஏன் எனது தாய் மீது சைக்கிளை மோதினாய் என்று கேட்டுள்ளார். அப்போது, ஆறுமுகத்தை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
கொலை
இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பாசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவான சிவகணேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.