தேனி
வருசநாடு அருகே கரடி தாக்கி 2 பெண்கள் படுகாயம்
|வருசநாடு அருகே கரடி தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மஞ்சனூத்து அருகே தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மகாலிங்கம், அவரது மனைவி லட்சுமி (வயது 45), மருமகள் லிதியாள் (31) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டு வாசலில் கட்டியிருந்த நாய் குரைத்தது.
இந்த சத்தம் கேட்டு லட்சுமி எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது கதவின் அருகே நின்றிருந்த கரடி திடீரென லட்சுமியை தாக்கியது. பின்னர் வீட்டுக்குள் சென்ற கரடி தூங்கி கொண்டிருந்த லிதியாளையும் தாக்க தொடங்கியது. இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட லட்சுமி, லிதியாள், மகாலிங்கம் ஆகிய 3 பேரும் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டனர்.
இதனால் கரடி வனப்பகுதிக்குள் ஓடியது. இதையடுத்து கரடி தாக்கியதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வருசநாடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.