விழுப்புரம்
வானூர் அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி நிலத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
|வானூர் அருகே புல் அறுக்க சென்ற பெண் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், விவசாயி. இவரது மனைவி நாகவல்லி (வயது 60), நேற்று முன்தினம் மாலை திருவக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றார்.
அப்போது அந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லையை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியை கவனக்குறைவாக தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் நாகவல்லி பரிதாபமாக இறந்துபோனார்.
உரிமையாளர் மீது வழக்கு
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மின்வேலிக்கு சென்ற மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் நாகவல்லி உடலை மீட்டனர். தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நாகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நாகவல்லி மகன் காத்தவராயன் அளித்த புகாரின்பேரில், விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் ரவிச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.