மதுரை
உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் இணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா- 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
|உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் இணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா தொடங்கியது.
உசிலம்பட்டி,
முத்தாலம்மன் கோவில் திருவிழா
மதுரை மாவட்டம் எழுமலையில் 18 கிராமங்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கும். இந்த திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் சிலையெடுக்கும் திருவிழா நடக்கிறது. அதன்படி 18 கிராமங்களிலிருந்து சிலை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று வழிபாடு செய்கின்றனர். மழை வரம் வேண்டி இவ்விழா நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு காரணமாக எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள உத்தப்புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி விலக்கு, எம்.கல்லுப்பட்டி மற்றும் துள்ளுக்குட்டிநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் என 2 நாட்கள் மூடப்படும் என மதுரை கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
உத்தப்புரம்
இந்த 18 கிராமங்களில் ஒரு கிராமமான உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் சிலை எடுத்து கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடத்தப்படாமல் உள்ளது.
தற்போது கோவிலில் சிலை எடுத்து திருவிழா நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
பாதுகாப்பு
இந்நிலையில் உத்தப்புரம் கிராமத்தில் மட்டும் சிலை எடுத்து கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை எனவும், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை உசிலம்பட்டி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார். அதன்படி இக்கிராமத்தில் வருகிற 26-ந்தேதி இரவு 8 மணி வரை 144 தடை உத்தரவு இருக்கும் எனவும், தனிநபர்கள் கூட்டமாக வரக்கூடாது, வெளியிலிருந்து வாகனங்களில் நபர்கள் வரவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் கோவில் திருவிழா நடைபெறும் 18 கிராமங்களிலும் 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1300 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.