< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

தூத்துக்குடி அருகே தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி அருகே தனிநபர்கள் முறைகேடாக நிலத்திட நீரை உறிஞ்சி விற்பதை தடுக்க கோரி நேற்று தண்ணீர் லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆழ்துளை கிணறு

புதுக்கோட்டை அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் தனிநபர்கள் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள 17 ஆழ்துளை கிணறுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், மீண்டும் அந்த பகுதியில் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டாலங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

போராட்டம்

இதனை தொடர்ந்து கட்டாலங்குளம் பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கட்டாலங்குளம் பகுதியில் நேற்று நிலத்தடி நீரை ஏற்றி வந்த 4 லாரிகளை சிறைபிடித்தனர். தொடர்ந்து முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் பிடித்து வைத்த 4 லாரிகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். முறைகேடாக செயல்படும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்