தேனி
தேனி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி மதுபாட்டில்களை உடைத்து ரகளை : 4 பேருக்கு வலைவீச்சு
|தேனி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனிசெட்டிபட்டி,
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலையோரம் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த முருகவேல் (வயது 44) விற்பனையாளராகவும், அல்லிநகரத்தை சேர்ந்த மணிகண்டன் (40) விற்பனை உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு பழனிசெட்டிபட்டியை சேர்ந்த மருது உள்பட 4 பேர் நேற்று முன்தினம் மதுபானம் வாங்க வந்தனர். அப்போது அவர்கள், டாஸ்மாக் ஊழியர்களிடம் கடையில் பணம் செலுத்த 'போன்-பே' வசதி உள்ளதா? என்று கேட்டனர்.
அதற்கு முருகவேல், 'போன்-பே' வசதி இல்லை என்றும், ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தும் கருவி உள்ளதாகவும் கூறினார். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஊழியர்களிடம் தகராறு செய்து, தலைக்கவசத்தால் தாக்கினர். பின்னர் கடையில் இருந்த மதுபான பாட்டில்களையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். அதில் 5 பெட்டிகளில் இருந்த மதுபான பாட்டில்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். காயம் அடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில், மருது உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.