தேனி
தேனி அருகே மனைவியை தாக்கிய ஆசிரியர் கைது
|தேனி அருகே மனைவியை தாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் சுந்தரமணி (வயது 40). இவர் கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாங்குயில் (40). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், சுந்தரமணி தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவரிடம் மாங்குயில் கேட்டார். அவரிடம் அவருடைய கணவர் சுந்தரமணி, மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் தகராறு செய்தனர்.
அப்போது அவரை சுந்தரமணி தாக்கினார். இதில் காயம் அடைந்த மாங்குயில் கொடுத்த புகாரின் பேரில் சுந்தரமணி, முருகேஸ்வரி ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சுந்தரமணியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாங்குயில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக மற்றொரு புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரின் பேரிலும் சுந்தரமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.